தமிழ் சினிமாவில் திருமணத்துக்கு பிறகும் இன்றும் நம்பர் 1 இடத்தில் நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் அதிகபட்சமாக ரூ. 12 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உள்ளார். தொடர்ந்து பல படங்கள் பிளாப் ஆன நிலையிலும் அவரது மார்க்கெட் இன்னும் பழைய இமேஜிலேயே தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த மனசங்கர வரபிரசாத் காரு படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் பான் இந்தியா படமாக வெளியான டாக்ஸிக் படம் நடிகை நயன்தாராவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை. அந்த படமே தோல்வி அடைந்ததால் படத்தின் நாயகன் யஷ் உட்பட அனைவருமே அப்செட்டில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழில் நடிகர் கவின் உடன் நயன்தாரா நடித்த ஹாய் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதனால் டாக்ஸிக் ஹாய் என நயன்தாரா பெரிய அளவில் எதிர்பார்த்த 2 படங்களுமே பலத்த ஏமாற்றத்தை தந்து தோல்வியடைந்து விட்டன.
இப்போதைக்கு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான் நடிகை நயன்தாரா மலை போல் நம்பியிருக்கிறார். இந்த படம் அவருக்கு கம்பேக் தரும் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடன் நடித்த முன்னணி ஹீரோக்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நயன்தாரா கூறியதாவது, ஷாருக்கான் ரஜினிகாந்த் மம்முட்டி மோகன்லால் சிரஞ்சீவி என யாராக இருந்தாலும் அனைவரிடமும் ஒழுக்கத்தையும் தொழில் மீதான மரியாதையையும் பார்க்க முடியும்.
அவர்களுடைய நட்சத்திர அந்தஸ்தை தாண்டி சினிமா மீதான ஆழமான அன்பும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் அன்புடனும் அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்தும் விதம் மிகவும் கவனிக்கத்தக்கது என்று நடிகை நயன்தாரா நட்சத்திர ஹீரோக்கள் குறித்து குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





