சினிமாவில் திரையில் தெரியும் நடிகர் நடிகைகளே ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக தெரிகின்றனர். ஆனால், ஒரு படத்துக்கு பின்னால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். படத்தின் ஹீரோ, ஹீரோயின் மட்டுமின்றி இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், காஸ்ட்யூமர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடல் ஆசிரியர், பாடகர் என பலரும் ஒரு படத்தில் பணிபுரிகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கவிஞர்களாகிய பாடல் ஆசிரியர்கள் பாடல் எழுதுவார்கள். அதை பாடகர்கள் தங்களது இனிமையான குரலில் பாடுவார்கள். அதற்கு இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள். அந்த பாடலை குறிப்பிட்ட நடிகர்கள் திரையில் அவர்களே பாடுவது போல, வாயசைப்பார்கள். இதுதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் இசையமைப்பது மட்டுமின்றி, அவர்களே படத்தில் சில பாடல்களை பாடுகின்றனர். குறிப்பாக இளையராஜா இப்படி பல பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் அவர் குரல் மிகவும் பெக்கூலியர் என்பதால், அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே தனித்துவமாக இருக்கும். அல்லது அவரது குரலில் பாடியதால் அந்த பாடல் தனித்துவம் பெற்றதாக மாறியிருக்கும்.
அதே போல் இசையமைப்பாளர்களில் எம்எஸ் விஸ்வநானும் சில பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் சொற்ப பாடல்கள்தான். அதே போல் இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சந்திரபோஸ், கங்கை அமரன் போன்றவர்களும் சில பாடல்களை பாடியுள்ளனர். ஆனால் மிக அதிக எண்ணிக்கையில் அவர்கள் பாடியதில்லை. ஒரு படத்தில் ஒரு பாடல் என்ற அளவில்தான் அவர்கள் சில படங்களில் மட்டுமே பாடியிருப்பார்கள்.
ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாடகர்கள் பாட வேண்டிய பாடல்களை அந்த படத்தில் நடிக்கும் விஜய், சிம்பு, தனுஷ், கமல், சித்தார்த் போன்றவர்களே பாடி விடுகின்றனர். அதே போல் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஏஆர் ரகுமான், ஹிப்ஆப் ஆதி, விஜய் ஆண்டனி போன்றவர்களே பாடி விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி கவிஞர்கள், பாடல் ஆசிரியர்களாக பாடல் எழுதிய காலம் மாறிப் போய் நடிகர்களும், இசையமைப்பாளர்களுமே பாடல்களை பாடுவது மட்டுமின்றி, அவர்களே பாடல் வரிகளை எழுதவும் செய்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட இப்போது பல பாடல்களை எழுதி, அவை ஹிட் பாடல்களாக விட்டன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் 6 பாடல்கள் இருந்த நிலை மாறி, 5 பாடல்களானது. இப்போது பல படங்களில் 3 பாடல்களை தாண்டுவதில்லை. இந்த சூழலில் திரைப்பட பாடல் எழுதும் கவிஞர்களும், பாடல் பாடும் பாடகர்களும் வாய்ப்பின்றி பிழைப்பின்றி தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.





