கடந்த 2009ம் ஆண்டில் வௌியான படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் அறிமுகமாகி இருந்தார். லோக்கல் கபடிக்குழு, தமிழக அளவிலான போட்டியில் பங்கேற்று ஜெயிப்பதுதான் படத்தின் கதை. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடக்கும் இந்த கதையை வெகு யதார்த்தமான திரைக்கதையில் உருவாக்கி இருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.
இந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சூரி. தொடர்ந்து சில படங்களில் அவர் நடித்த போது டைட்டில் கார்டில் பரோட்டா சூரி என்றுதான் போட்டனர். நாளடைவில் அவர் வளர்ந்து முன்னணி காமெடி நடிகரான பிறகு சூரி என்று மாற்றிவிட்டனர். இப்போது சூரி முன்னணி நாயகனாக மாறி, நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் தந்த வெற்றியை தொடர்ந்து, துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் அவர் நடித்த சொக்கன் கேரக்டரும் அவருக்கு பலத்த வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 படங்கள் சூரி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதில் கொட்டுக்காளி படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த பேனரில் தயாரித்திருக்கிறார். பின்னணி இசை இல்லாமல் கொட்டுக்காளி படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொட்டுக்காளி படம் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சூரி துவக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் இணைந்து காமெடி நடிப்பில் நடித்திருக்கிறார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், மனம் கொத்திப் பறவை, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் ஒருவர் ஒருவர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசுகையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நானும் சிவாவும் நண்பர்களாக நடித்தோம். அதன்பிறகு இருவரும் அண்ணன் தம்பி போல இருந்து வருகிறோம். இந்நிலையில் என் தம்பி தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு என்னை அழைத்து பேசிய சிவகார்த்திகேயன், என்ன நடிப்பு இது அண்ணா, என் அம்மா, என் மனைவி எல்லாம் பார்த்து மிரண்டு விட்டனர். நீங்கள் ஒரு அருமையான நடிகர் என்று என்னை பாராட்டினார் என்று சூரி கூறியிருக்கிறார்.





