அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், ருக்மணி வசந்த், விக்ராந்த், துப்பாக்கி பட வில்லன் வித்யூட் ஜமால் உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்தனர். சென்னையை மையப்படுத்தியே இதன் படப்பிடிப்பை நடத்தி வந்தார் ஏ ஆர் முருகதாஸ்.
படத்தின் டீசரும் வெளியான நிலையில், சிவகார்த்திகேயனுக்கு அதில் மனம் வளர்ச்சி குன்றிய கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டது. கஜினி திரைப்படம் போன்று இதிலும் ஹீரோ ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார் என சினிமா விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். இதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, முருகதாசுக்கு சல்மான்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மதராசி திரைப்படத்தின் பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டு, மும்பைக்கு பறந்தார் முருகதாஸ். அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கினார். அவசர அவசரமாக எடுக்கப்பட்டு வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் நடுவே சிவகார்த்திகேயனும், தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டார்.
இதில் அவர் தனது 25வது திரைப்படம் ஆக பராசக்தியை தேர்வு செய்ய, அதனை சுதா கொங்கரா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிப்பதும் அதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. இவர்கள் போக அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் பட குழுவில் இடம் பெற்றனர். சென்னை திருச்சி காரைக்குடி இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது இதன் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே ஏ ஆர் முருகதாஸ் உடனான மதராசி திரைப்படத்தின் பணிகளை முடித்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் குட் நைட் என்னும் ஃபீல் குட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இதனை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. முக்கியமாக படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





