சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூட் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட ஏராளமானவர் நடித்திருக்கிறார்கள். ஆக்சன் கதை களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்க இருந்த புறநானூறு திரைப்படம் தான், தற்போது பராசக்தியாக மாறி இருக்கிறது. 1960களில் நடைபெறுவதுபோல இதனை எடுத்து வருகிறார்கள்.
சென்னை, சிதம்பரம், காரைக்குடி மற்றும் இலங்கையில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இன்னும் ரயிலில் நீராவி இன்ஜின் அங்கு உபயோகப்படுத்தப்படுவதால், இலங்கையில் அது சம்பந்தப்பட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்போது திடீரென நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு எழுந்த சிக்கலே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு பொள்ளாச்சியில் மீண்டும் சூட்டிங் தொடங்கி இருக்கிறார் சுதா கொங்கரா. படத்தில், கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். அதர்வா ராணா உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளார்கள். வில்லனாக ரவி மோகன் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
அனேகமாக பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு, தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதனை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.
இந்த நிலையில் இருவரும் தற்போது இணையப் போகும் திரைப்படத்திற்கு பாஸ் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





