தமிழ் சினிமாவில் பல சிறந்த பாடல்களை எழுதியவர் கவிஞர் நா முத்துக்குமார். மிகவும் யதார்த்தமாக கவிதை வரிகளையும் வாழ்க்கையின் வலிகளையும் தனது எழுத்தில் கொண்டு வந்த வலிமையான கவிஞராக கொண்டாடப்பட்டவர். அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான தங்க மீன்கள் என்ற படத்தில் கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற ஒரு பாடலே அவரது கவித்திறமைக்கு சிறந்த சான்றாக அமையும். இன்னும் ஆயிரக்கணக்கான நல்ல பாடல்களை தந்திருக்க வேண்டிய கவிஞர் நா முத்துக்குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவால் மறைந்து விட்டார்.
கவிஞர் நா முத்துக்குமார் திரைப்பட பாடல் ஆசிரியராக மட்டுமின்றி கவிஞராக பல கவிதை நூல்களையும் எழுதி இருக்கிறார். அதுவும் வாசகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இலக்கிய உலகில் நா முத்துக்குமாரின் எழுத்துக்கு பெரிய அங்கீகாரமும் மரியாதையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பல பாடல்கள் ஜெயிக்க காரணம் நா முத்துக்குமாரின் வரிகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மறைந்த பாடல் ஆசிரியர் கவிஞர் நா முத்துக்குமாரின் நினைவை போற்றும் விதமாக ஆனந்த யாழ் என்கிற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் வருமானத்தை கொண்டு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மூலம், மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் குடும்பத்துக்கு சொந்தமாக வீடு வாங்கி தருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, முதல் முறையாக இயக்குனர் நெல்சன் என்னை அழைத்து பாட்டு எழுத சொன்னார். அப்போது நான் சும்மா ஜாலியாக ஒரு பாட்டு எழுதினேன். அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அந்த வேலை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சம்பளமாக ஏதாவது கொடுங்கள். அதை நான் நா முத்துக்குமார் சாருக்கு கொடுக்கணும் என்று கேட்டேன். இது உதவி இல்லை, என்னுடைய கடமை என்று நினைக்கிறேன்.
மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் போல பாடல் எழுத இன்னொருவர் பிறக்க முடியுமா என்று தெரியவில்லை. சார் நீங்கள் இல்லாததால் நிறைய கொடுமைகள் நடக்கின்றன. நான் எல்லாம் பாடல் எழுதுகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பாடல் எழுதுவதற்கு முன்னாடியும் உங்களுடைய 2 பாடல்களையாவது கேட்டுவிட்டு தான் நான் எழுதுவேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





