தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில், வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் பலருக்கும் பரீட்சையமானவர் கவின். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவர் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட கவின், வெள்ளித்திரையில் தனக்கு வந்த வாய்ப்புகளை தவறவிடாமல் தக்கவைத்துக் கொண்டார். இதில் கதாநாயகனாக லிப்ட் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதன்பிறகு, டாடா திரைப்படத்தில் அவர் நடித்தார். அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கிய இந்த திரைப்படத்தில், அபர்ணா தாஸ், பாக்யராஜ், வி டி வி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்தனர். கல்லூரி படிக்கும்போதே திருமணம் செய்து கொண்ட காதலர்கள், குடும்ப வாழ்க்கையில் அவர்களுக்குள் இருக்கும் சிக்கல், அதன் பிறகு தந்தைக்கு மகனுக்குமான உறவு என அனைத்தையும் ஜன ரஞ்சகமாக கூறிய அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் கவினுக்கும் தனது திரையுலக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் டாடா திரைப்படம் அமைந்தது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக அது அமைய, அடுத்தடுத்த படங்களில் தற்போது பிஸியாகி இருக்கிறார் கவின். அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பியார் பிரேம காதல் படத்தை இயக்கிய இளனுடனும், கவின் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஸ்டார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. மேலும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திலும் கவின்தான் நாயகன் என்று கூறப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜும் கவினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதுபோக இயக்குனர் நெல்சன், கவினை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இதனை நெல்சனிடம் உதவியாளராக இருந்த சிவபாலன் இயக்குகிறார். படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா வருகிறாராம். இருவர் தொடர்பான காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டுள்ளதாம். கவின் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்திருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.





