பேராசிரியர் சாலமன் பாப்பையா நடத்திய பட்டிமன்றங்களில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜா. இவரை பட்டிமன்றம் ராஜா என அழைக்கின்றனர். சிவாஜி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோ காஷ்மோரா மாப்பிள்ளை நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளிநாடு சென்ற ராஜா ஒரு வீட்டில் சாப்பிடும் போது அங்கிருந்த பெண்ணிடம் சமையல் குறித்தும் சாதி குறித்தும் விசாரித்ததாக ஒரு தகவல் வெளியாகி அது இணையத்தில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. பேராசிரியர் நடுவர் சாலமன் பாப்பையா, ராஜா விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது, தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன் கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன்.
ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறையில் சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.
இதில் நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன் என்று சாலமன் பாப்பையா கூறியிருக்கிறார்.





