தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் ஓட்டலில் 50 பரோட்டா சாப்பிடும் ஒரு காமெடியில் அவர் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால், ஆரம்பத்தில் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்ட அவர், இப்போது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்கரமான ஹீரோவாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிகார்ந்த் விஜய் சூர்யா தனுஷ் ஜெயம் ரவி விக்ரம் சிவகார்த்திகேயன் விஷால் போன்றவர்களுடன் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் சூரியை விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தின் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் சூரி.
விடுதலை படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் சூரி அடுத்து மாமன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் சுவாசிகா ராஜ்கிரண் விஜி சந்திரசேகர் கீதா கைலாசம் பால சரவணன் பாபா சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மாமன் படம் வருகிற மே மாதம் 16ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது போஸ்டருடன் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் எல்ரட் குமாரின் ஆர் எஸ் இன்போ இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கடலுக்கு நடுவில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவது போன்ற ஒரு படத்துடன் இந்த படத்தின் தலைப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
மண்டாடி என்ற புதிய தலைப்பு இந்த படத்தின் மீதான கவனத்தை ரசிகர்களிடம் அதிகமாக ஈர்த்துள்ளது. மண்டாடி என்றால் என்ன என்பது பலருக்கும் கேள்வியாக எழுந்துள்ளது. கடலுக்குள் மீன்கள் அதிகமுள்ள இடத்தை அதற்கான நீரோட்டத்தை கண்டறிந்து அந்த பகுதியில் வலை வீசுவது மீனவர்களின் வழக்கம். அப்படி நீரோட்டத்தை கண்டறிந்து மீன்கள் இருப்பிடத்தை அறிந்து வலை வீசுபவருக்கே மண்டாடி என்ற பெயர். சூரி மீனவன் கேரக்டரில் நடிப்பதால் படத்துக்கு இந்த டைட்டில் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.





