ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னதாக அண்ணாத்த தர்பார் என இரண்டு தோல்வி திரைப்படங்களை ரஜினிகாந்த் கொடுத்திருந்த சூழலில், ஜெயிலர் திரைப்படம் அதற்கு மருந்தாக அமைந்தது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தனது மகளான ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும், மத அரசியல் குறித்தும் எடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை இந்த திரைப்படம் பெறவில்லை. குறிப்பாக திரைப்படம் மிகவும் மெதுவாக நகர்ந்ததாகவும், அழுத்தமான காட்சிகள் இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மிகவும் குறைவான வசூலை பெற்ற இந்த திரைப்படம், பலருக்கும் பிடிக்காமலும் போனது.
இப்படியான சூழலில் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. படத்தில் அவர் தங்கத்தை கடத்தும் நபராக நடிக்கிறார்.
வரும் 22ஆம் தேதி படம் குறித்த டைட்டில் கார்டு வெளியாகிறது. இதற்குப் பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கும் திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.
தற்போது சௌந்தர்யா, அசோக் செல்வனை வைத்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இதன் பிறகு அவர் தனது தந்தையுடன் இணைந்து படம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவும் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் மீண்டும் அதே போல் ஒரு திரைப்படமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





