சினிமாவில் சாதிக்க ஆசைப்பட்டு, சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து. பின், கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அதன்பின், உதவி இயக்குநராக, இயக்குநர் வசந்த் திடம் பணிசெய்தார். கண்ணும், கண்ணும், புலிவால் படங்களை எடுத்த மாரிமுத்து, பின்னாளில், சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கடைசியாக, ஜெயிலர் படத்தில், ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில், அவர் மாரடைப்பால் காலமானார்.
சினிமாவில், ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான மாரிமுத்துவை சகல தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தியது எதிர்நீச்சல் என்ற சீரியல்தான். ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த மாரிமுத்துவின் யதார்த்தமான பேச்சும், நடிப்பும், அவரது ‘இந்தாம்மா ஏய்’ என்ற வசன உச்சரிப்பும் ரசிகர்களுக்கு, வெகு எளிதாக அவரை பிடித்து போய்விட்டது.
ஆனால், அவர் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில், அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக, சிறந்த இயக்குநராக மக்கள் மத்தியில் பேசப்படுபவர் என்ற தகவல் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. அது மார்க் ஆண்டனி வெற்றியில் திளைக்கும் நடிகர், இயக்குநர் எஸ்ஜே சூர்யா தான்.
இயக்குநர் வசந்திடம், உதவி இயக்குநாக மாரிமுத்து இருந்த போது, எஸ்ஜே சூர்யாவும் உதவி இயக்குநராக ஆசை, நேருக்கு நேர் போன்ற படங்களுக்கு பணி செய்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் எஸ்ஜே சூர்யாவும், மாரிமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.
அதன்பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்குநராகி வாலி, குஷி படங்களை எடுத்த போது அந்த படங்களில் மாரிமுத்து, உதவி இயக்குநராக பணிசெய்திருக்கிறார். இத்தகைய சூழலில் ஒருமுறை, மாரிமுத்துவின் மனைவிக்கு உடல் நலமின்றி, மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அன்றைய சூழலில் மாரிமுத்து, கையில் பணமின்றி சிரமப்பட்டிருக்கிறார். ஆனால், எஸ்ஜே சூர்யாவிடம் இதுபற்றி மாரிமுத்து சொல்லவில்லை.
ஆனால், இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்ட எஸ்ஜே சூர்யா, மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவமனை பில்லை கட்டிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, பில்லுக்கு மேல் 2 ஆயிரம் ரூபாயை கூடுதலாக சூர்யா கட்டிவிட்டுச் சென்றாராம் . மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிச் செய்தியுடன் எஸ்ஜே சூர்யா பற்றிய இந்த தகவலும், இப்போது வைரலாகி வருகிறது.





