தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது மேலும் இதை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்களது தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் நடிகைகள் குறித்து சிலர் தவறாக பேசி வருகின்றனர்.
அதில் மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாமலும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். குறிப்பாக சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து, கோர்ட்டில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த உறுதிமொழியில் இருந்து அவர் சற்றும் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் அந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதையடுத்து சற்று காலம் அவதூறுகள் எதுவும் வெளிவராத நிலையில் சமீபகாலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைதளங்களில் வாரி இறைத்து வருகின்றனர். அவ்விதம் அவதூறு பரப்புவோர் வழக்கை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்த வேண்டும்.
அவ்விதம் நிறுத்த தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவரது மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மீது தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.





