புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கமும் வற்புறுத்தியது. மேலும் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதை உறுதி செய்து தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் புதிய படங்களை வெளியிடுவோம் என்றும் முடிவு எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம், தென் மாநிலங்களில் இது போன்ற நடைமுறை இல்லாத போது தமிழகத்தில் மட்டும் இதைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதை ஏற்க முடியாது என்று சொல்லி வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்படும். புது படங்கள் ரிலீஸ் ஆகாது. மேலும் படங்களின் போஸ்ட் புரடக்சன் பணிகளும் நடக்காது என்று அதிரடியாக அறிவித்தனர். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தமிழ்குமரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளளை சந்தித்துப் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பேசினோம்.
இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தற்போது படங்கள் வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதையே தொடருங்கள். கூட்டத் தொடர் முடிந்ததும் முதல்வர் விஜயின் ஆலோசனைப்படி அரசு தலைமையில் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும். அதுவரை வேலை நிறுத்தம் வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் அறிவித்த புதிய திரைப்படங்கள் வெளியீடு படப்பிடிப்பு பணிகள் போஸ்ட் புரடக்சன் ஆகியவைகளின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.





