சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என அழைக்கப்படும் அருள் சரவணன் ஆரம்பத்தில் அவரது சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்தார். அதன்பிறகு லெஜண்ட் என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அவரது மேக்கப் கோட் சூட் உடை அலங்காரம் ஹீரோயிசம் பார்த்து பலரும் அவரை ட்ரோல் செய்து கலாய்த்தனர்.
லெஜண்ட் படத்தில் நடித்த பிறகு லெஜண்ட் சரவணன் என அழைக்கப்பட்ட அவர் இப்போது கருடன் கொடி காக்கிச்சட்டை எதிர்நீச்சல் பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 3ம் தேதி வெளியானது.
லீடர் படத்தை லெஜண்ட் சரவணனே சொந்தமாக தயாரித்த நிலையில் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படம் இதுவரை 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தரப்பில் கூறப்படும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை 25 கோடி ரூபாய் வசூலை லீடர் படம் கடந்துவிட்டதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது.
முதல் படம் லெஜண்ட் படத்தை காட்டிலும் பல விதங்களில் தனது 2வது படத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் மாறுபட்ட தன்மையை வெளிப்படுத்தி படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் படம் போல நடிப்பில் சொதப்பாமல் ஒரு பக்குவப்பட்ட நடிப்பை லீடர் படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தனது 3வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை துரை செந்தில்குமாருக்கு தந்த லெஜண்ட் சரவணன் மேலும் ரூ. 1 கோடி அட்வான்ஸ்சும் தந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வருகிற 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த 3ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட லீடர் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. ரெட் ஜெயிண்ட் மூவீஸ் எல்ஐகே படத்தை வெளியிடுவதால் 350 முதல் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அந்த படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே 70 கோடி ரூபாய் வரை இதற்காக தியேட்டர்கள் தரப்பில் அட்வான்ஸ்சும் தரப்பட்டுள்ளது. அதனால் லீடர் படம் ஓடும் தியேட்டர்களில் ஒரே வாரத்தில் அந்த படத்தை மாற்றிவிட்டு எல்ஐகே படம் ரிலீஸ் செய்யப்பட்டால் லீடர் படம் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் ஒரு சூழல் உருவாகி உள்ளது.





