உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. தொடர்ந்து தமிழில் பல வெற்றிப் படங்களை தந்தார். அருணாசலம் அன்பே சிவம் வின்னர் முறை மாமன் மேட்டுக்குடி ரெண்டு என பல படங்களை இயக்கிய அவர், ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறினார்.
தலைநகரம் வீராப்பு ஆயுதம் செய்வோம் தீ குரு சிஷ்யன் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாகவும் நடித்தார். நடிப்பிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அவரது இயக்கத்தில் அரண்மனை படம் இதுவரை 4 பாகங்களாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அரண்மனை 5 படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படம் 2ம் பாகத்தை சுந்தர் சி அடுத்ததாக இயக்க உள்ளார். அதே போல் வடிவேலுவுடன் சுந்தர் சி இணைந்து நடித்த கேங்ஸ்டர் படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி, வடிவேலு இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சடகோபன் ரமேஷ் மனோபாலா மணிவண்ணன் சிட்டி பாபு சோனா சூட் உள்ளிட்டோர் நடித்த மதகஜ ராஜா படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. காமெடி, காதல், ஆக்சன் நிறைந்த படம் பெரிய வரவேற்பை பெற்று 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, 1000 கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் சொல்லி நான் வாய்விட்டு வம்பில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. படம் நல்லபடியாக ஜெயித்து மக்களை சந்தோஷப்படுத்தினால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
வசூல் எல்லாம் என் ஏரியா அல்ல. நான் ஒரு இயக்குனர். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம். மக்கள் தியேட்டருக்கு வந்தால் 20 நிமிடமாவது கவலை மறந்து சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுவே என் ஆசை. மற்றபடி வசூல் கணக்கு எல்லாம் தயாரிப்பாளர் பக்கம்தான், என்று சுந்தர் சி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





