தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஞ்சித். பல வெற்றிப்படங்களில் நடித்தவர். மிக இயல்பான நடிப்பும், கொங்கு தமிழில் அவரது வசனங்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பல படங்களில் அவர் தொடர்ந்து நடித்தார். சமீபமாக, டிவி சீரியல்களிலும் ரஞ்சித் நடித்து வருகிறார்.
நடிகர் ரஞ்சித் பொன்விலங்கு என்ற படத்தில்தான் முதலில் அறிமுகமானார். இந்த படம் 1993ம் ஆண்டில் வெளியானது. அடுத்து சிந்துநதிப்பூ என்ற படத்தில் ரஞ்சித் நடித்தார். அடுத்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்தார். சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா படத்தில், கேமியோ ரோலில் ரஞ்சித் நடித்திருந்தார்.
நடிகர் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில், ரஞ்சித் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதை பெற்றார். தொடர்ந்தும் பல படங்களில் ரஞ்சித் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் இப்போது புதிதாக தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கியிருக்கிறார். தற்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை முடித்த பிறகு அவர் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு திட்டமிட்டு, அரசியலுக்கு வந்துள்ளதை அவர் ஏற்கனவே உறுதியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகர் ரஞ்சித்திடம் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், இதுவரை எத்தனையோ கட்சிகள் ஆட்சிக்கு வந்து சென்றிருக்கிறது. இந்த கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மைகள் நடந்தது. மதுவை ஒழிப்போம், இலவச கல்வி தருவோம் என்றார்கள். எதையுமே செய்யவில்லை. தேர்தலின் போது ஆயிரம் வாக்குறுதிகளை தருகின்றனர். எதையுமே நிறைவேற்றுவதே இல்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என அவர்களை சிறையில் வைக்க முடியாது.
விஜய் அரசியல் வருகை குறித்த நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன். ஆனால் அரசியலுக்குள் புதிதாக வருபவர்களை வர விடமாட்டார்கள். அங்கு இருப்பவர்களே அனைத்தையும் திருட வேண்டும் என்ற எண்ணம்தான். தமிழ்நாடு இப்போது இருக்கும் நிலையில் ஒரு விஜய் அல்ல, ஆயிரம் விஜய் வந்தாலும் கூட காப்பாற்ற முடியாது. விஜய் அரசியலுக்கு வந்து எல்லாவற்றையும் மாற்றி காட்டினால் என்றால், அவரை கடவுளாக கும்பிடுவேன். நெஞ்சில் அவரை பச்சை குத்திக்கொள்வேன், என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஞ்சித்.





