விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அந்த நிகழ்ச்சி தந்த புகழ் காரணமாக கேபிஒய் பாலா என்று அழைக்கப்படுகிறார். விரைவில் அவர் நாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை சில தினங்களுக்கு முன் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
கேபிஒய் பாலா சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக செலவு செய்கிறார். குறிப்பாக மருத்துவ உதவிகளை நிறைய செய்கிறார்.
அந்தியூர் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகிராம மக்களுக்காக 5 ஆம்புலன்ஸ்களை வாங்கி இலவசமாக கொடுத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள், வசதியற்ற பெண்ணுக்கு ஆட்டோ, கூலித்தொழிலாளிக்கு மொபட் என பலருக்கும் அவர் உதவிகளை செய்து வருவதால் மக்கள் மத்தியில் அவரது மனிதநேயத்துக்கு தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் சூப்பர் குட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிசெய்தவர் என்பதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். முண்டாசுப்பட்டி ரஜினி முருகன் பிசாசு ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயின் தன்மை 4ம் நிலையில் உள்ள சூழலில் சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய நண்பர்கள், தன்னுடன் நடித்தவர்கள் என பலரிடமும் உதவி கேட்டு வருகிறார். அவரது மனைவி அளித்த நேர்காணல் ஒன்றில், மருந்து மாத்திரை வாங்க கூட கையில் காசில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் கேபிஒய் பாலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து அவரது மருத்துவ செலவு குடும்ப செலவுக்காக ரூ. 75 ஆயிரம் வழங்கி உதவியுள்ளார். இதே போல் பாதிக்கப்பட்ட அவருக்கு மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி தனக்கு தேடி வந்து உதவிய கேபி ஒய் பாலாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.





