இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிலம்பரசன் திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம் என்றார். இதற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் தக்லைஃப் படம் வெளியாகவில்லை.
தனது படத்தை வெளியிடுமாறு கர்நாடகா கோர்ட்டில் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், கமல் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் தக்லைஃப் படம் ரிலீஸ் ஆக கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.
இந்த சூழலில் தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அது நீதிபதிகள் உஜ்ஜல் புயால், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மொழி பிரச்சனையை காரணம் காட்டி தக்லைஃப் படத்தை தடை செய்ய முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தக்லைஃப் படம் திரையிடப்பட்டால் வேண்டிய பாதுகாப்புகளை செய்வதாக கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, தக்லைஃப் படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்.
தக்லைஃப் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். அது உங்கள் கடமை. தியேட்டருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு காமெடி நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன. நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?
நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக் கூடும். இதனை அனுமதிக்க முடியாது. கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.





