நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். துவக்கத்தில் கேமரா முன்பு நிற்கவும், வசனம் பேசவும், நடனம் ஆடவும் தெரியாமல் பரிதவித்தவர்தான் சூர்யா. தனது நீண்ட கால நண்பர், சினிமாவில் மூத்தவர் என்ற முறையில் சிவக்குமார் மீது அபிமானம் கொண்டவர் ரஜினிகாந்த்.
அப்படிப்பட்ட ரஜினிகாந்த், சூர்யா நடித்த முதல் படத்தை பார்த்த பிறகு, இந்த பையனுக்கு எதுவுமே சரியா தெரியலையே, எப்படி ஜெயிக்க போகிறார் என்று நினைத்து வருத்தப்பட்டதாக சூர்யா கலந்துக்கொண்ட ஒரு படவிழாவில் ரஜினியே இதை நேரடியாக தெரிவித்தார். அந்தளவுக்கு சூர்யாவின் சினிமா துவக்கம், அவரது படங்களில் அப்படி தான் இருந்தது.
ஆனால் இயக்குநர் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படமும், இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா படமும் சூர்யாவுக்கு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தன. அதன்பிறகு காக்க காக்க, கஜினி, பிதாமகன், சிங்கம் போன்ற படங்களால் முன்னணி வரிசைக்கு வந்தவர்தான் சூர்யா. இவரது வெற்றிக்கு இயக்குநர்கள்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர்.
ஆனால் பருத்திவீரன் பிரச்னையில் இயக்குநர் அமீரையும், வணங்கான் படத்தில் பாதி வரை நடித்துவிட்டு, இயக்குநர் பாலாவையும் பகைத்துக்கொண்டு வெளியேறியவர்தான் சூர்யா. அவரை பொருத்தவரை ஏற்றிவிட்ட ஏணியை, தன் வாழ்க்கையில் கைதூக்கிவிட்டு உதறியவர்களை ஒருகட்டத்தில் மறந்துவிடுவதுதான் என்ற விமர்சனம் வலுவாக இருந்து வருகிறது.
தன் மனைவி ஜோதிகா ஆலோசனை மற்றும் விருப்பத்தின்படி இப்போது மும்பையில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகிறார். இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகிவிட்ட சூர்யாவுக்கு, ஆங்கில படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. 2024ம் ஆண்டில் பாலிவுட், ஹாலிவுட் என தனது சினிமா பயணத்தில் வேறு திசைகளில் செல்கிறார் சூர்யா.
இதற்கிடையே பருத்திவீரன் தயாரிப்பு பிரச்னையை சுமூகமாக முடித்துவைக்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றிமாறன் முனைப்பாக உள்ளார். இதற்காக அமீருக்கு ரூ. 10 கோடி தந்துவிடுங்கள் என சூர்யா, ஞானேவல் ராஜா தரப்புக்கு கண்டிசன் போட்டுள்ளார். மேலும் வாடிவாசல் படத்தில் அமீருடன் சேர்ந்துதான் சூர்யா நடிக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என வாய்ப்புகள் வந்துள்ள நிலையில், தமிழில் வாடிவாசல் படத்துக்கு நோ சொல்லி விடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் தவிக்கிறார் நடிகர் சூர்யா.





