நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்டர் மாதம் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியானது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். வசீகரா படத்துக்கு பிறகு, சினேகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். வில்லனாக நடிகர் மோகன் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் 455 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை செய்த முதல் படம் தி கோட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படம் 230 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் 325 கோடி ரூபாய் வசூலித்து, 2ம் இடத்தில் உள்ளது.
இப்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது முதல் முறையாக தயாரிக்கும் இந்த படம்தான், விஜயின் கடைசி படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் 1000 கோடி வசூலித்த படங்கள் உள்ள நிலையில், தமிழில் இன்னும் 1000 கோடி ரூபாய் வசூலை எந்த படமும் தொடவில்லை. அதனால் விஜய் கடைசியாக நடித்துவரும் தளபதி 69 படம் அந்த பெரிய சாதனையை புரிய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அதில் ரஜினி நடித்த கூலி, அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி, கமல் நடித்த தக்லைப் படங்களும் போட்டிக்கு வருகின்றன.
இந்நிலையில், தளபதி 69 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. வருகிற ஆங்கில புத்தாண்டு அன்று, விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லும் விதமாக தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. புத்தாண்டு நாளில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாஸ் ஆக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





