தமிழ் சினிமாவில் இப்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடிப்பது டிரண்டிங் ஆக போய்க் கொண்டிருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் சிலர் வில்லனாக நடித்து ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கின்றனர். கூலி படத்தில் ஹீரோ நடிகர் நாகார்ஜுனாதான் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. கங்குவா 2ம் பாகத்தில் சூர்யாவுக்கு, அவரது தம்பி நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வைரலானது. நடிகர் கமல் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படி ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் வழக்கமாக ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள், வில்லனாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு தி கோட் படத்தில் நடிகர் விஜய் நடிப்பு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. வில்லத்தமான நடிப்பில் தி கோட் படத்தின் வெற்றிக்கு விஜய் முக்கிய காரணமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல.
அதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் அஜீத்குமார், வாலி படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெரிய அளவில் மாஸ் காட்டி இருந்தார். அந்த படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்ஜே சூர்யா, இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் முக்கியமான முன்னணி வில்லன் நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினி நடித்து வரும் கூலி படத்தை முடித்துவிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்க உள்ளார். வருகிற ஏப்ரல் 10ம் தேதி கைதி 2 படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 நாட்களுக்குள் இந்த படப்பிடிப்பை முடித்துவிடவும் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார்.
கைதி 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது அவர் கமல் நடித்த விக்ரம் படத்தில் கிளைமாக்ஸில் நடித்த ரோலக்ஸ் என்ற வில்லன் கேரக்டரில் தான் கைதி 2 படத்தில் நடிக்கிறார். கைதி 2 படத்தில் டெல்லி கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கு வில்லனாக, ரோலக்ஸ் ஆக சூர்யா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் விக்ரம் 2 படம் எடுக்கப்படும் பட்சத்தில் அந்த படத்தில்தான் ரோலக்ஸ் கேரக்டரில் கமலுக்கு வில்லனாக சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வில்லனாக சூர்யா நடிப்பது, ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால் விக்ரம் 2 படம் எப்போது வரும், அதில் வில்லனாக சூர்யா நடிக்க மாட்டாரா, ரோலக்ஸ் கேரக்டரில் கைதி 2 படத்தில் நடிப்பதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.





