இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாலா. அதன் பிறகு விக்ரம் நடிப்பில் சேது படத்தை இயக்கினார். முதல் படமே பாலாவின் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்களின் அதிக கவனம் பெற்றார் பாலா. இந்த படம்தான் நடிகர் விக்ரமின் சினிமா பயணத்தை துவக்கி வைத்தது.
அதன்பிறகு விக்ரம் சூர்யா நடித்த பிதாமகன், ஆர்யா விஷால் நடித்த அவன் இவன், ஆர்யா நடித்த நான் கடவுள், சசிக்குமார் நடித்த தாரை தப்பட்டை அதர்வா நடித்த பரதேசி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் பாலா. இப்போது அவரது இயக்கத்தில் வணங்கான் படம், பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவுக்குள் வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கான பாராட்டு விழா மற்றும் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகிய இரண்டு நிகழ்வுகளையும், வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வணங்கான் பாலா 25 என்ற விழாவை நேற்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தார்.
வணங்கான் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும், இயக்குனர் பாலாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். பிறகு சூர்யா கேரக்டரில் அருண் விஜய் அந்த படத்தில் நடித்தார். இந்நிலையில் நேற்று நடந்த இந்த விழாவில் நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா இருவருமே பங்கேற்றனர்.
அதே போல், இயக்குனர் பாலா இயக்கத்தில் இதுவரை எந்த படத்திலும் நடிக்காத நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த விழாவில் பங்கேற்றார். அவர் விழா மேடையில் பேசுகையில், அருண் விஜய் அண்ணன் இந்த விழாவில் நீ கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், என்றும் குறிப்பிட்டு பேசினார்.
ஆனால் இந்த விழாவில் இயக்குனர் பாலாவால் வெளிச்சம் பெற்ற, சினிமாவில் அதிக கவனம் பெற்ற சியான் விக்ரம், ஆர்யா, அதர்வா மற்றும் பாலா படத்தில் நடித்த நடிகைகள் யாருமே வந்து கலந்துக்கொள்ளவில்லை. சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ஒரு மரியாதை, பாச உணர்வு கூட பாலா படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கு இல்லாதது தமிழ் சினிமா ரசிகர்களை விரக்தியடைய செய்தது. குருவுக்கு இப்படியா சிஷ்யர்கள் மரியாதை செய்வாங்க, என்று கமெண்ட் செய்துள்ளனர்.





