நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். ஆனால் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை தந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார். குறிப்பாக பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம், கடந்த 14ம் தேதி வெளியான நிலையில், பலத்த தோல்வியை சந்தித்தது.
கங்குவா படம் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற படக்குழு, கங்குவா படம் குறித்து பலவிதமான பில்டப்புகளை செய்ததே படத்துக்கு மோசமான விமர்சனம் கிடைக்க காரணமாகி விட்டது. படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா, 2000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்க வருகிறது கங்குவா என்றார். 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சொல்லி, படத்தின் தரத்தை குறைக்காதீர்கள் என்று ஒரு நேர்காணலில் சங்கடப்பட்டார்.
அதே போல் நடிகர் சூர்யாவும் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும். படம் பார்க்கும் போது வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள் என்று பெருமிதமாக பேசினார். ஆனால் படம் வெளியான பிறகு படம் பார்த்தவர்கள், சத்தம் தாங்க முடியலே, படம் முழுக்க கத்திக்கிட்டே இருக்காங்க என்று காதுகளை பொத்திக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள்.
காதுகளை மூடிக்கொண்டு படம் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, வாயை பிளந்துக்கொண்டு படம் பார்ப்பார்கள் என்று நடிகர் சூர்யா தவறுதலாக மாற்றிச் சொல்லி விட்டார் என்றும் கிண்டலடித்தனர். இந்த குற்றச்சாட்டு காரணமாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தியேட்டர் உரிமையாளர்களிடம் 2 புள்ளிகள் சத்தம் குறைத்து வைக்க கேட்டுக்கொண்டார்.
கங்குவா படம் கடந்த 14ம் தேதி வெளியான நிலையில், 22 தினங்களில் இதுவரை உலகம் முழுவதும் மொத்தம் ரூ. 150 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 11,500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்த படம் வசூலில் 150 கோடி ரூபாயை தொட்டதே பெரிய ஆச்சரியம்தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதையடுத்து கங்குவா படம் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 8ம் தேதி ஞாயிறு அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கங்குவா படம் வெளியாகிறது. கங்குவா படத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லாத ரசிகர்கள், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கங்குவா படம் பார்த்து, சூர்யா நடிப்பை வரவேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.





