நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் ஆகிய படங்களை எடுத்த மகிழ் திருமேனி தான் இதன் இயக்குனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதமே வெளியானது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பட டைட்டிலையும், தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கும் வி சென்டிமென்டாக டைட்டில் இருக்க வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் டைட்டில் அவ்வளவு எடுப்பாக இல்லை என்று ஆரம்பத்திலேயே ரசிகர்கள் கூறினர். இந்தத் திரைப்படத்திலும் வி சென்டிமென்ட் தானா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது ஒரு பக்கம் இருக்க மே மாதம் பட அறிவித்ததோடு சரி அதன் பிறகு எந்த ஒரு சூட்டிங் பணிகளும் தொடங்கவில்லை. நடிகர் அஜித்குமாரும் பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுலா செல்ல, இங்கு கதையை வடிவமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் மகிழ்திருமேனி. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் படத்தின் சூட்டிங் தொடங்கியது. அப்போதிலிருந்து இப்போது வரை முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் மட்டும் படம் எடுக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஷூட்டிங் ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகியும், தயாரிப்பு நிறுவனமான லைகா எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் உள்ளது. இப்போதைக்கு படத்தை இயக்குவது மகிழ் திருமேனி என்ற விபரத்தை மட்டுமே அந்த தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது. அதேசமயம் சூட்டிங் ஸ்பாட்டில், வெளியான திரைப்படங்கள் மூலம் படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது வரைக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இப்படியான சூழலில், அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை முடித்திருக்கிறது விடாமுயற்சி பட குழு. அடுத்ததாக, ஒரே கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும், அது ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதம் அதற்கான வேலைகள் தொடங்கப்படும் எனவும், ஏப்ரல் அல்லது மே மாதத்தின் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரெடியாக இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக அனிருத் ஐந்து பாடல்களை இசை அமைத்திருக்கிறாராம். அதில் ஒரு பாடல் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா அளவுக்கு குத்து பாடலாக இருக்கும் என்று பேசுகிறார்கள். அதேசமயம் இது ரேசி ஆக்சன் திரில்லர் எனக் கூறப்பட்ட நிலையில், அதற்கு எதற்கு குத்து பாட்டு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.





