இயக்குனர் கார்த்திக் சுப்பராஜா இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த படம் ரெட்ரோ. வருகிற மே 1ம் தேதி ரிலீஸாகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 தோல்வி படங்களை தந்த நடிகர் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டில் சூர்யா நடித்த கங்குவா படமும் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
அதனால் ரெட்ரோ படம் குறித்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே வாய் பேசாத ஒரு கேரக்டரில் மாற்றுத்திறனாளியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இப்போது மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்தில், பேய் கேரக்டரில் நடித்திருப்பதும் பூஜா ஹெக்டே தான். அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்திலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரெட்ரோ படத்துக்கு பிறகு சூர்யா தனது 45வது படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் வக்கீலாகவும், அய்யனார் சாமியாகவும் 2 கேரக்டர்களில் அவர் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. கோவை சென்னை ஐதரபாத் ஆகிய பகுதிகளை தொடர்ந்து இப்போது பெருங்களத்தூரில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்துக்கு பிறகு தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வேறு தகவல் வெளியாகி உள்ளது. லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில்தான் சூர்யா அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
வாடிவாசல் படத்தின் பவுண்டர் ஸ்கிரிப்ட் எனப்படும் படத்தின் முழுக்கதை வசனங்களை உள்ளடக்கிய ஸ்கிரிப்ட்டை நான் படித்து பார்த்த பிறகே, படப்பிடிப்புக்கு வர சம்மதிப்பேன் என்ற புதிய கண்டிஷனையும் போட்டிருக்கிறார். அதனால் முழு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் வெற்றிமாறன் இறங்கிவிட்டார். அதற்குள் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு, வருகிற ஜூன் மாதம் துவங்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் சூர்யா கலந்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





