நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக தனது 69 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.
தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்துவிடும் நடிகர் விஜய், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் முழு நேர அரசியல்வாதியாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பணிகளில் முழு தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே, தனது விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். கொடியை அறிமுகப்படுத்தினார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்தார். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஏழை மக்களுக்கு வறுமையில் வாடும் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வந்தார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஒவ்வொரு முறையும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு நேரடியாக வரவழைத்து ரொக்க பரிசுகளை வழங்கினார். அதேபோல் அவர்களது பெற்றோர்களையும் மேடை ஏற்றி கௌரவித்தார். சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் கால்கடுக்க நின்றபடி இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார்.
அதேபோல் நடப்பு ஆண்டிலும், 10ம் வகுப்பு பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த நிகழ்வு ஜூன் மாதம் நடக்கலாம் என்று தெரிகிறது.
நடிகர் விஜய் போலவே, நடிகர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். விஜய் சூர்யா இருவருமே ஒரே சமயத்தில், ஒரே காலகட்டத்தில் தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இப்போது தனது ரசிகர் மன்றங்கள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்த முனைப்பு காட்டுகிறார். மாவட்ட நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். நடிகர் விஜய் போலவே சூர்யாவுக்கும் எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் ஆர்வம் இருக்கலாம். அதன் காரணமாகவே ஆர்வத்தில் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்துவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.





