இந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது என்றே கூறலாம். டிசம்பர் தொடங்கியதும் வங்க கடலில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
பலரும் தங்கள் உடமைகளை இழந்து தவிக்க மீட்பு பணிகளையும் அரசு துரிதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இந்த மழை நீர் வடிந்து போவதற்குள் அடுத்ததாக, தென் மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த இந்த கன மழையால், நெல்லை தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிகக் கடுமையாக சேதமடைந்தது.
வீடு வாசல்களை இழந்து, பலர் உடைமைகளை எடுக்க முடியாமல் தவித்தனர். வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் அந்த இடங்களே வெள்ளக் காடாக காட்சியளித்தன. இதை தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட தமிழக அரசு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என உறுதி அளித்தது. இதேபோல் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
இதில் நெல்லை பகுதிகளில் நிவாரணத் தொகை காண டோக்கன் வழங்கப்பட்டு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளும் நிவாரண பணியில் ஈடுபட்டன. நடிகர் விஜயும் தனது தளபதி மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவினார். இதற்காக நெல்லை வந்த அவர், சுமார் 1500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி கை கொடுத்தார்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சுபுரத்திற்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவாரண பொருட்களை டி ராஜேந்தர் வழங்கியபோது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்கள் கழித்து கண் விழித்த அவரை, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர்.





