தமிழ் சினிமாவில் இன்று ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குபவர்களாக முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் ரூ. 140 கோடி, கமல் ரூ. 150 கோடி, விஜய் ரூ. 200 கோடி, அஜீத்குமார் ரூ. 163 கோடி என்பது இன்றைய நிலவரப்படி அவர்களது சம்பளமாக கூறப்படுகிறது. இன்னும் தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சிவகா்த்திகேயன் போன்றவர்களும் ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.
நடிகர் விஜயை பொருத்த வரை, அரசியல் தலைவராகி விட்டார். அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூ. 3 கோடி வரை தனது வருமானத்தில் இருந்து செலவு செய்கிறார். ரொக்கப் பரிசுகளை வாரி வழங்கி, அவர்களுக்கு மேடையில் பொன்னாடை போத்தி, பெற்றோர்களையும் கௌரவித்து வருகிறார்.
ஆனால் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் இதுவரை மக்களுக்காக ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை. தமிழ்நாட்டில் ஏதேனும் பேரிடர், இயற்கை சீற்றம் ஏற்பட்டால் ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம் என நிவாரணம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஒரு போதும் உதவிகளை செய்தது இல்லை. ஆறுதல் சொன்னதும் இல்லை.
இதே ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமணம் மண்டபம் கட்டிய ஆரம்ப காலத்தில், ஏழை எளிய மக்கள் திருமணம் செய்துக்கொள்ள இலவசமாக மண்டபத்தில் அனுமதிப்பேன் என்றார். ஆனால் சலுகை கட்டணத்தில் கூட அப்படி ஒரு விஷயத்தை அவர் இதுவரை செய்யவில்லை. நடிகர் கமல்ஹாசன் சொல்லவே வேண்டாம், மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி தலைவராக இருந்தும் மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்புக் கூட சொந்த காசில் வழங்காத பெரும் வள்ளல் அவர்தான்.
ஆனால் இந்த நடிகர்கள் சினிமாவில் ஏழைகளுக்காக போராடுவார்கள். கண்ணீர் சிந்துவார்கள். நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா என்ற பாடல் வரிக்கு வாயசைத்து கைதட்டல் வாங்கிக் கொள்வார்கள். லஞ்சம் ஊழலை எதிர்க்கும் இந்தியன் 2 படத்தில் நடித்த கமல், திமுகவுக்கு தேர்தல் பிரசாரம் செய்த மாதிரிதான் நிஜத்திலும் நடிகர்களாகவே எப்போதுமே இருக்கின்றனர். ஆனால் இந்த உண்மைகளை ரசிகர்கள் எப்போதுமே உணர்வதே இல்லை.
ஆனால், தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு, ஆண்டுதோறும் தனது வருமானத்தில் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை மக்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கி விடுகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஏழை மக்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு நன்கொடையாக இந்த தொகைகளை அவர் ஆண்டுதோறும் வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





