கோடிக்கணக்கில் பணம் அருவியாக கொட்டும் சினிமாவில், இன்னும் இன்னும் வருமானத்தை, லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களின் ஆர்வமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும்படியாக படங்களாக தரவே விரும்புகின்றனர்.
அதுவும் இப்போது பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பதான், ஜவான் படங்களின் வாயிலாக ஆயிரம் கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கை கடந்து பிளாக் பஸ்டர் மூவிகளாக தந்துவிட்டதால், அதே வழியில் தமிழ் சினிமா படங்களும் இருக்க வேண்டும் என்ற முனைப்பு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது.
அதற்காக சின்ன சின்ன கேரக்டர்களில் நடிப்பதாக இருந்தால் கூட தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படவுலகில் முன்னணி நடிகராக உள்ளவர்களை களத்தில் இறக்கி விடுகின்றனர். அந்த கோணத்தில்தான் ஜெயிலர் படத்தில் சில நிமிட காட்சிகளில் வந்து சென்ற மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்களின் கேரக்டர்கள் அமைந்து இருந்தன.
இதே நிலைதான், லியோ படத்திலும் நீடிக்கிறது. ரஜினி நடிக்கிற தசெ ஞானவேல் படமான ரஜினி 170 படத்திலும் தொடர உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத்பாசில் என நடிக்க உள்ளனர். ரஜினி 171 படத்தில், அதிக நட்சத்திரங்களை பாலிவுட்டில் இருந்து கொண்டு வரவும் ஒரு பிளான் வைத்திருக்கிறார் ரஜினி என்றும் தகவல் கசிந்துள்ளது.
இப்படி பான் இந்தியா படங்கள், ஆயிரம் கோடி வசூல் இலக்கால், சில காட்சிகள் வந்து சென்றாலும், பல கோடி ரூபாய்களை, பிறமொழி சார்ந்த ஹீரோக்கள் அள்ளிச் செல்கின்றனர். அதேவேளையில் தமிழ் சினிமாவில் வளர்ந்த, வளர்ந்துக்கொண்டு இருக்கிற நடிகர், நடிகைகளுக்கு இந்த பான் இந்தியா படங்கள் வாய்ப்பளிப்பது இல்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை.
ஏனெனில், தமிழ் நடிகர்கள் நடிப்பு திறமை இருந்தாலும் பார்ப்பதற்கு பாமர தனமான தோற்றமும், எளிமையான பேச்சு வழக்கும் கொண்டவர்கள். ஆனால், பான் இந்தியா படங்களில் நடிக்க, பல மொழிகளிலும் ஏற்கும்படியான கலைஞர்களே தேடிப்பிடித்து தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை புறக்கணித்து விடுகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர், நடிகையர் எதிர்காலம், பான் இந்தியா படங்களால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.





