தமிழ் சினிமாவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமோ என்ற பெயரில் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். படத்தில் ஹீரோ நடிக்க கமிட் ஆனதில் இருந்து, படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கும் வரை ஏதேதோ விஷயங்களை பிரமோ என்ற பெயரில் அப்டேட் செய்து, செய்து படம் குறித்த ரசிகர்களுக்கு விளம்பரம் செய்துக்கொண்டே இருக்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இப்படி எல்லாம் சினிமா சார்ந்த தகவல்களை மக்கள் அறியவில்லை. தியேட்டரில் படம் ரிலீசான பிறகுதான் ரசிகர்கள் அதுபற்றிய விவரங்களை அறிய முடியும். அப்போது படம் வெளியானால் அது எம்ஜிஆர் படம், சிவாஜி படம், ரஜினி படம், கமல் படம் அவ்வளவுதான் ரசிகர்களின் கவனத்தில் இருக்கும்.
இப்போது போல படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், நடன இயக்குனர் என எந்தவிதமான தகவலும் அந்த காலகட்டத்தில் ரசிகர்களுக்கு தெரியாது. சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதுபற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் இப்போது ஏ டு இசட் வரை ஒரு படத்தின் அனைத்து தகவல்களும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது.
வழக்கமான சினிமா சார்ந்த நிகழ்வுகள், படத்துவக்க விழா, பிரஸ்மீட் போன்றவை சத்யம் தியேட்டர் போன்ற இடங்களில்தான் நடக்கும். அதுதான் சரியானதாகவும் இருந்தது. ஆனால் இப்போது கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த துவங்கி இருக்கின்றனர். இதற்கு கல்வி நிறுவனங்கள் எப்படி சம்மதிக்கின்றன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்திருக்கிறது. அதே போல் அதே நாளில், சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவும் அதே நாளில் அதே கல்லூரியில் நடந்திருக்கிறது. இதில் அந்த 2 படங்களில் நடித்த முக்கிய நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.
இப்படி சினிமா நிகழ்ச்சிகளை, மாணவ மாணவியர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் நடத்தினால், அவர்களது கல்வி பாதிக்கப்படும். பல நாட்களுக்கு அந்த சினிமா சார்ந்த நினைவுகளும், பேச்சுமே அவர்கள் மத்தியில் இருக்கும். இதனால் அவர்களது கல்வி நலன் பாதிக்கும் என்பதை இனிமேல் இதுபோன்ற சினிமா நிகழ்வுகளுக்கு அனுமதி தரும் முன், கல்வி நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். சினிமா சார்ந்த நிகழ்வுகளுக்கு கல்வி நிறுவனங்கள் உகந்தது அல்ல என்ற சமூக அறிவும் சினிமாத்துறையினருக்கு வர வேண்டும்.





