தமிழ் சினிமாவில் இந்த நட்சத்திரக் கூட்டம் பார்மூலாவை துவக்கி வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜாக தான் இருக்க முடியும், இதில் இயக்குனர் ராஜமவுலியையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது நெல்சன் திலீப்குமார். சிறுத்தை சிவா, தசெ ஞானவேல் என எல்லோருமே இந்த பார்மூலாவுக்கு மாறி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்பெல்லாம் ரஜினி படம் என்றால் அதில் ரஜினிதான் நடித்திருப்பார். கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜீத்குமார், தனுஷ் என அந்த படங்களில் முக்கிய ஹீரோ கேரக்டரில் குறிப்பிட்ட நடிகர் மட்டுமே நடித்திருப்பார். மற்ற நடிகர்கள் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்திருப்பர். கேமியோ ரோல், கெஸ்ட் ரோல் என்பதெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தது போல இருந்தது.
ஆனால் இப்போது ஒரு படம் என்றால் அதில் 6 முதல் 7 ஹீரோக்கள் இணைந்து நடிக்கின்றனர். அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிறமொழி முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்து, படங்களை இயக்குகின்றனர். இனி சிங்கிள் நடிகர் நடித்த படம் என்பதே தமிழ் சினிமாவில் இருக்காது போலிருக்கிறது.
வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் நடித்துள்ளனர். கூலி படத்தில் ரஜினியுடன் உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ், சவுபின் சாகர், அமீர்கான் நடிப்பது இதுவரை உறுதியாகி இருக்கிறது. அதே போல் ராயன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன் என ஒரு நட்சத்திர கூட்டமே இருந்தது.
இப்போது தி கோட் படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், சுதீப், மைக் மோகன் என பலர் நடிக்கின்றனர். மேலும் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன், ஏஐ தொழில் நுட்பத்தில் விஜயகாந்த், விவேக் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத். மிஷ்கின் என ஒரு கூட்டமே நடித்திருந்தது.
இப்படி ஹீரோ நடிகர்களை கூட்டம் கூட்டமாக படங்களில் நடிக்க வைப்பது தமிழ் சினிமாவில் டிரண்டிங் ஆகி விட்டதால் இனி தனியாக சிங்கிள் நடிகராக ஒருவர் நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் அது உண்மையில் பெரிய விஷயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு தமிழ் சினிமா சென்றுக்கொண்டு இருக்கிறது. இது மிகவும் தவறான பார்மூலா. இப்படி தமிழ் சினிமாவை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை தடுக்க இயக்குனர்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்.





