தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006ல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம்.
ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே.
அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள்.
தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? என்று விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





