தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம்.
அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
கடந்த 1999ம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999ம் ஆண்டில் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.





