நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 2007ம் ஆண்டில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் அவர் நடித்த முதல் படம் பருத்திவீரன் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து கார்த்தி முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
நடிகர் சிவக்குமாரின் இளைய மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களை கடந்து ஒரு நல்ல நடிகராக கார்த்தி தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். இதுவரை 26 படங்களில் கார்த்தி நடித்துள்ள நிலையில் சில படங்கள் தவிர பெரும்பாலான அவரது படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
குறிப்பாக கைதி கடைக்குட்டி சிங்கம் தோழா மெட்ராஸ் நான் மகான் அல்ல அழகுராஜா தீரன் அதிகாரம் 1 பையா என பல படங்கள் கார்த்திக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கின்றன. கார்த்தி நடிப்பில் அடுத்ததாக சர்தார் 2 வா வாத்தியார் போன்ற படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்திலும் கார்த்தி நடிக்க ஆயத்தமாகி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இதற்கிடையே டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இங்கு முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நான் ஈ படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான் நானி. தெலுங்கில் முன்னணி நட்த்திர நடிகராகவும் நானி இருக்கிறார். அவர் கார்த்தியுடன் முதன்முறையாக இந்த படத்தில் நடிக்கிறார்.
முன்பெல்லாம் தமிழ் ஹீரோ தமிழ் படத்தில்தான் நடிப்பார். தெலுங்கு ஹீரோ தெலுங்கு படத்தில்தான் நடிப்பார் என்ற நிலை இருந்தது. பான் இந்தியா படங்களுக்கு சினிமா மாறிவிட்டதால் எல்லா மொழி படங்களிலும் எல்லா மொழி நடிகர்களும் நடிக்கின்றனர். அதுவும் கார்த்தி, நானி இடையே நெருக்கமான நட்பு இருப்பதால் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான நானி நடித்த ஹிட் படத்தில் கார்த்தி நடிக்க இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது மிஸ் ஆனதால், இந்த படத்தில் இருவரும் இணைகின்றனர்.





