நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர் தில் ராஜூ. தெலுங்கு சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர். வினியோகஸ்தராகவும் உள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். தெலுங்கு சினிமாத்துறையில் மிக முக்கியமானவராக தில்ராஜூ இருந்து வருகிறார்.
தமிழில் வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜூ, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் தோல்வியை சந்தித்ததால் ரூ. 200 கோடி வரை தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தில் ராஜூ தயாரித்த படம்தான் சங்கராந்தி வஸ்துனம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். தி கோட் லக்கி பாஸ்கர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி மற்றும் காக்கா முட்டை நம்ம வீட்டு பிள்ளை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் அந்த படங்களில் நாயகிகளாக நடித்திருந்தனர்.
சங்கராந்தி வஸ்துனம் என்ற இந்த படம் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோக்களை, பெரிய நடிகர்களை நம்பி படம் தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்திப்பதை விட, இப்படி சின்ன பட்ஜெட் படங்களை எடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் சமீபத்தில் தில் ராஜூ பேசியிருக்கிறார்.
வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் வெளியான பிறகு 4 வாரங்கள் 6 வாரங்கள் 8 வாரங்கள் போன்ற கால இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. அதன்பிறகு 60 நாட்கள் என்ற கணக்கில் சாட்டிலைட் சேனல்கள் அந்த படங்கள் வெளியாகின்றன. ஆனால் தியேட்டர்களில் ஓடிடி தளங்களில் படம் பார்த்த ரசிகர்கள், சேனல்களில் அந்த படங்கள் வெளியாகும் போது ஆர்வமாக பார்ப்பது இல்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக டிவி சேனல்களில் வெளியாகும் புதுப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. டிஆர்பி ரேட்டிங்கும் வருவதில்லை. இதனால் சாட்டிலைட் சேனல்கள் படங்களை மிக குறைந்த விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளன. இந்த சூழலில், தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தியேட்டரில் மாபெரும் வரவேற்பு பெற்ற சங்கராந்தி வஸ்துனம் படத்தை முதலில் டிவி சானலில் வெளியிட்ட பிறகுதான், ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்வது என்ற முடிவை செய்திருக்கிறார். இதில் தமிழ் சினிமாவிலும் கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





