கடந்த வாரத்தில் 25ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நித்யாமேனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி படமும், இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் பகத் பாசில் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த மாரீசன் படமும் வெளியானது. இதில் தலைவன் தலைவி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் மாமன்னன் படத்துக்கு பிறகு நடிகர்கள் பகத் பாசில், வடிவேலு காம்போவில் வெளியான மாரீசன் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் பெரிய வசூலை இந்த படம் பெறவில்லை. ஒரு தரப்பு ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் திருப்தியை தரவில்லை என்பதால் பலரும் இந்த படத்தை பாராட்டவோ ஊக்குவிக்கவோ இல்லை.
மாரீசன் படம் வெளியான 3 நாட்களில் மட்டுமே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதன்பிறகு பல தியேட்டர்களில் கூட்டமே இல்லை. இதனால் கடந்த 2 தினங்களாக பல இடங்களில் மாரீசன் காட்சி ரத்து ஆகியுள்ளது. மேலும் பல தியேட்டர்களில் மாரீசன் படக்காட்சியை ரத்து செய்துவிட்டு தலைவன் தலைவி படக் காட்சிகளை அதிகரித்துள்ளனர்.
இதுவரை தலைவன் தலைவி படம் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இன்னும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாரீசன் படம் வசூல் மொத்தமாக இதுவரை 5 கோடி ரூபாயை கூட தாண்டவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. வசூல் ரீதியாக மாரீசன் தோல்வி படம் என்பதும் உறுதியாகி உள்ளது.
மாமன்னன் படத்தை வரை கதைக்களம் வேறுமாதிரியாக இருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் படம் என்கிற தனி அடையாளம் இருந்தது. உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் போன்ற நட்சத்திர கலைஞர்களும் இருந்தார்கள். முதன்முறையாக குணச்சித்திர வேடத்தில் வடிவேலு நடித்தது பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்ததால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
ஆனால் மாரீசன் படத்தில் வடிவேலுவின் கேரக்டரை ரசிகர்கள் பெரிதாக ரசித்து வரவேற்கவில்லை. மேலும் மிக முக்கியமான காரணங்களாக இந்த படத்துக்கு சரியான பிரமோசன் இல்லை. போஸ்டர்கள் வெளியீடு டீசர் வெளியீடு இசை வெளியீட்டு விழா என எதுவுமே நடத்தவில்லை. சரியான பப்ளிசிடி செய்யாமல் மாரீசன் படக்குழு மெத்தனமாக இருந்து விட்டது. ஆனால் தலைவன் தலைவி பப்ளிசிடி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றதும் குறிப்பிடத்தக்கது.





