எப்போதுமே பிரச்னைகளை வேடிக்கை பார்ப்பது என்பது மனிதர்களுக்கு சுவாரசியமானதாக இருக்கிறது. அதுவும் வீடுகளில் நடக்கும் குடும்ப சண்டைகளை, தெருவில் நடக்கும் சண்டைகளை குறிப்பாக பெண்களின் குழாயடி சண்டை காண பலரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்ப்பதே அதில் வரும் போட்டியாளர்களுக்குள் ஏற்படும் சண்டைகள்தான் காரணமாக உள்ளது.
அந்த வகையில் கணவன் மனைவி சண்டையை மையப்படுத்தி அந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம்தான் தலைவன் தலைவி. கடந்த மாதம் 25ம் தேதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தனர். பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதியின் கேரக்டர் இருந்தது.
மேலும் இந்த படத்தில் காளி வெங்கட் மைனா நந்தினி யோகிபாபு ஆர்கே சுரேஷ் சரவணன் தீபா தேனப்பன் சித்ரா லட்சுமணன் சென்ட்ராயன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். கணவன் மனைவிக்குள் ஏற்படும் குடும்ப சண்டை, இரு குடும்பங்களுக்குள் அதனால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திய ஒரு கதைக்களமாக தலைவன் தலைவி படம் இருந்தது.
படம் முழுவதும் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வாங்கிய சம்பளத்துக்கு மேலே நடித்து விட்டார்கள் என்று விமர்சிக்கப்பட்ட போதிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த படம் 90 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த நிலையில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்தாண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதே போல் இந்த தலைவன் தலைவி படமும் ரூ. 100 கோடி வசூலித்தால் அது பெரிய சாதனையாக கருதப்படும். அதே நேரத்தில் இடையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தலைவன் தலைவி படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் ஓடிடி தளத்தில் வருகிற 22ம் தேதி தலைவன் தலைவி படம் ரிலீஸாகிறது. திரையில் நடந்த குடும்ப சண்டையை இனி வீடுகளில் டிவி திரையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் திரையிலும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.





