நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி படத்தை இயக்குவதாக அறிவிப்பும் வெளியானது. ஏற்கனவே ரஜினி நடித்த அருணாசலம், கமல் நடித்த அன்பே சிவம் படங்களை இயக்கியவர் சுந்தர் சி என்பது கவனிக்கத்தக்கது.
இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தலைவர் 173 படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. காமெடி காதல் பேமிலி சென்டிமென்ட் கவர்ச்சி என கமர்ஷியல் ஹிட் கொடுப்பவர் சுந்தர் சி என்பதால் தலைவர் 173 படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் திடீரென இயக்குனர் சுந்தர் சி தலைவர் 173 படத்தில் இருந்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறுவதாக திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு தலைவர் 173 படத்தை இயக்குனர்கள் ராம்குமார் பாலகிருஷ்ணன் நித்திலன் சாமிநாதன் எச் வினோத் அஸ்வத் மாரிமுத்து இவர்களில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது.
இந்த இயக்குனர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தனித்தனியாக கதை கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தலைவர் 173 படத்தின் இயக்குனர் யார் என்பதில் இன்று வரை குழப்பமே நீடித்தது. இந்த சூழ்நிலையில் இன்று தலைவர் 173 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தின் டைரக்டர் என இன்று ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு தலைவர் 173 படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான் படத்துக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிக்கும் ஒரு படத்தை தான் டைரக்ட் செய்வதாக முதலில் தகவல் இருந்தது. ஆனால் இப்போது திடீரென சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆகியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





