நடிகர் விக்ரமிற்கு சமீப காலங்களாக நடித்த அத்தனை திரைப்படங்களும் தோல்வியையே தழுவி வருகின்றன. தெய்வத்திருமகள் ஐ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய வெற்றி என்பது கிடைக்கவே இல்லை என்று தான் கூற வேண்டும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரும் பல நட்சத்திரங்களில் ஒருவராகவே நடித்ததால் அது தனியாக விக்ரம் படம் என்று கூற முடியாது.
இது போக கோப்ரா, ஸ்கெட்ச், இருமுகன், சாமி ஸ்கொயர் உள்ளிட்ட படங்கள் அனைத்துமே வந்த தடம் தெரியாமல் மறைந்து போயின. தனது மகன் துருவுடன் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றாலும், அது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்களிடையே பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.
இப்படியான சூழலில் கௌதம் மேனன் உடன் அவர் இணைந்து பணியாற்றிய துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பிலேயே உள்ளது. படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால், இன்னும் ரிலீஸ் தேதி தெரியாமல் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் சீயான் ஈடுபாடு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படியான சமயத்தில் அவர், தங்கலான் திரைப்படத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், விக்ரமின் தோற்றமே பிரம்மிப்பாக உள்ளது. அடர்ந்த தாடி, நீண்ட ஜடை முடி, கையில் பெரிய கம்பு அவரது தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்தில், பசுபதி, மாளவிகா மோகனின் பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் கோலார் தங்க வயலில் ஒரு குறிப்பிட்ட சாதி மேல் நடத்தப்பட்ட தாக்குதலை இந்த படம் விவரிப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் டீசரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் ப்ரடக்சன் பணிகளில் தாமதம் நீடிப்பதால், அந்த திரைப்படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அதேசமயம் ரிலீசுக்கு முன்னால், சர்வதேச திரைப்பட விழாக்களில் தங்கலானை அனுப்ப பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். இதனால் ரிலீஸிற்கு முன்பே அந்த படம் பல சாதனைகளை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.





