தமிழக அரசியல் வரலாற்றில், எம்ஜிஆர் போல எந்த தலைவரையும் மக்கள் இதுவரை பார்க்கவில்லை. கொண்டாடியதும் இல்லை. தமிழ் சினிமாவில் புரட்சி நடிகராக அழைக்கப்பட்டவர், பின் மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சராக ஆட்சி நடத்தியதால், புரட்சித் தலைவராக போற்றப்பட்டார். அவர் மண்ணை விட்டு மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் எம்ஜிஆர் மக்கள் மனங்களில் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறார். அவரது நினைவை ஒருமுறை கூட அசைபோடாத மனங்களே இல்லை எனலாம்.
உடல்நலக்குறைவால், அமெரிக்காவில் அவர் சிகிச்சையில் இருந்த போது, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார் என்பதில் இருந்தே மக்கள் அவர் மீது கொண்டிருந்த அபரிதமான அன்பும், மரியாதையும் தெளிவாக புரிந்துவிடும். மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக இருந்த எம்ஜிஆர், இன்னும் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், அவர்தான் தமிழக முதல்வராக இருந்திருப்பார். ஏனெனில் இன்றும் அவரது புகழ் தமிழக மக்கள் மத்தியில் மங்கவில்லை என்பேத நிதர்சனம்.
இப்போதும், அரசியல் ஆர்வம் நடிகர்களிடம் குறையவில்லை. உலக நாயகனாக, ரசிகர்களின் மனம் வென்ற கமல், மக்கள் நீதிமய்யம் கட்சியை துவக்கிய நிலையில், பல ஆண்டுகளாகியும் அரசியலில் பெரியதாக இதுவரை எதுவும் சாதித்துவிட முடியவில்லை. அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய், அரசியலுக்கு வரும் முனைப்புகளில் தீவிரம் காட்டுகிறார். அவருக்கும், தமிழக அரசியலில் தானும் ஒரு எம்ஜிஆராக வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறது.
இப்போது, விஜய் நடித்த லியோ படத்துக்கு ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் என, பல இடங்களில் விற்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தெரிந்தும் விஜய், இதுபற்றி எதுவும் சொல்வதுமில்லை. கண்டுகொள்வதுமில்லை. அவர் படங்கள் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் இப்படி எளிய ரசிகர்களிடம் இருந்து, பணம் பறிக்கப்படுவது நடக்கிறது. இதற்கு ரசிகர்களும் ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இதே போன்று எம்ஜிஆர் படங்களுக்கு அதிக டிக்கெட் கட்டணங்கள் வசூலித்த போது, அப்படி அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு என் ரசிகர்கள் படம் பார்க்க போகக்கூடாது என, தன் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் உத்தரவு போட்டார். அந்த உத்தரவை ரசிகர்கள் யாரும் மீறவில்லை. குறிப்பிட்ட விதிமீறல் தியேட்டர்களையும் எம்ஜிஆர் கண்டித்தார். அதுதான் எம்ஜிஆர்.
ரிக்ஷா ஓட்டுபவரும், காய்கறி விற்பவரும், தினசரி கூலித்தொழிலாளியும் தனது ரசிகர்கள் என்பதை உணர்ந்தவர் எம்ஜிஆர். அப்படி ரசிகர்கள் மீது எம்ஜிஆர் போல, ஒருமுறையாவது அக்கறை காட்டாத விஜய், தலைகீழாக நின்றாலும் எம்ஜிஆரின் நிழலை கூட தொட முடியாது என்கின்றனர் சினிமா ரசிகர்கள். திரையில் கைதட்டும் ரசிகர் கூட்டம், அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளும். ஆனால் அரசியலுக்கு வரும்போது, ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெறுவது முக்கியம் என்பதை நடிகர்கள் மறந்துவிடக் கூடாது.





