தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் நடிகர் சரத்குமார் முன்னணி நடிகராக இருந்தார். புலன்விசாரணை, ராஜ கைய வெச்சா, வசந்த கால பறவை போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்த அவர், சேரன் பாண்டியன் படத்துக்கு பிறகு ஹீரோவாக மாறினார்.
சூரியன் படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்துக்கு வந்த சரத்குமார் நாட்டாமை, சூரிய வம்சம், சிம்ம ராசி, மூவேந்தர், மாயி, பாட்டாளி, சமுத்திரம், ஐயா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கினார்.
ஆனால் சினிமாவில் சாதித்த அளவுக்கு, ஒரு அரசியல் தலைவராக பெரிய அளவில் மக்கள் மத்தியில் சரத்குமாருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் மனைவியை பிரிந்திருந்த சரத்குமார், ஒரு கட்டத்தில் நடிகை ராதிகாவை காதலித்து 2வது திருமணமும் செய்துக்கொண்டார்.
இப்போதும் பொன்னியின் செல்வன், போர்த்தொழில் போன்ற படங்களில் நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், 2026ம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சர் நான்தான் என்றும் அவரது கட்சி மேடைகளில் பேசி வருகிறார். இதை நீங்கள் நம்ப மறுத்தாலும், அதுதான் நடக்கப் போகிறது. இதை யாராலும் மாற்ற முடியாது என்றும் பேசி வருவது, அவரது தொண்டர்களுக்கே ஆச்சரியத்தை தந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சரத்குமார் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த், தன்னை அழைத்து ஒரு படம் குறித்து பேசியதாகவும், அதில் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று கூறியதாகவும் சொல்லி இருக்கிறார்.
என்னை ஒருமுறை வீட்டுக்கு அழைத்த ரஜினிகாந்த், சுப்ரீம் ஸ்டாரும், சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்தால் அந்த படம் நல்லா இருக்கும். ரஜினி ஒரு சர்வதேச உளவாளியாகவும் சரத்குமார் ஒரு தேசிய காவல்படை அதிகாரியாகவும் அந்த படத்தின் கேரக்டர்களை சொல்லி, சீன் பை சீன் அந்த படத்தை மாஸ் ஆக சொல்லி இருக்கிறார். படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கட்டும் என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் அதன்பிறகு அது நடக்கவில்லை. என்றாலும், ரஜினி ஸ்டைல் காட்டி நடிக்கும் மாஸ் ஹீரோ மட்டுமல்ல, அவருக்குள் இன்னொரு முகமாய், கதாசிரியர், இயக்குநர் இருப்பதை நான் அன்றுதான் கண்டுக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.





