இப்போதைய சினிமாவில் பிரமாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும் காட்டி ரசிகர்களை மிரட்சி அடைய செய்வதில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் படத்தில் கதை பிரமாண்டமாக இருந்தாலே, ரசிகர்கள் மிரண்டு விடுவார்கள் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதே இல்லை.
சமீபத்தில் 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சித்தா படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என மொத்தம் 7 விருதுகளை வென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட பிரமாண்டம் இருக்காது. யதார்த்தமான, உருக்கமான காட்சிகள் மட்டுமே இருந்தன.
ஆனால் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் உருவாக்கப்படும் படங்கள், கதையை பற்றி கவலைப்படுவதே இல்லை. பிரமாண்டம், தொழில்நுட்பம், ஸ்டார் வேல்யூ இந்த விஷயங்களை மட்டுமே பெரிய பலமாக வைத்துக்கொண்டு படங்களை தயாரிக்கின்றன. ஆனால் இந்த படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக கடந்தும் விடுகின்றன. இதற்கு படங்கள் மீதான ரசிகர்களின் அபரிமிதமான ஆர்வம்தான்.
ஏனெனில் சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படம் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்தார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தமிழகம், கேரளாவில் மட்டுமே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சாதாரண அளவில்தான் வரவேற்பு இருந்தது.
ஆனால் ஆந்திராவிலும், அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இந்த படம் முதல் பாகமாக மட்டுமே வெளியான நிலையில், 2ம் பாகமாக அடுத்தக்கட்டமாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் என்பதால் படம் பார்த்த பலரும் படமே புரியவில்லை என்றனர்.
மேலும் மகாபாரத கதையை வேறு மாதிரி சித்தரித்து எடுத்திருப்பதாகவும் ஒரு தரப்பினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. கமல், அமிதாப் பச்சனுக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கல்கி 2898 ஏடி படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற 29ம் தேதி இந்த படம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





