இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற புகழ் பெற்ற இயக்குனர் கே பாக்யராஜ் சில தினங்களுக்கு முன்புதான் மறைந்தார். அவர் ஒருமுறை தனது மகன் சாந்தனுவிடம் பேசிய வீடியோ காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு நடிகராக இயக்குனராக சினிமா சார்ந்து இல்லாமல் எனக்கு ஒரு தந்தையாக சூப்பர் அப்பா என்று நான் பெருமைப்படும் விஷயம் எது என்று சாந்தனு தன் அப்பாவிடம் கேட்கிறார்.
அதற்கு கே பாக்யராஜ் கூறியதாவது, இதை நீ கேட்டதால் நான் சொல்கிறேன். ஆனால் இதை நீயும் வாழ்க்கையில் பாலோ அப் பண்ணனும். என்னுடைய குருநாதர் பாரதிராஜா மீது இப்போதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவருக்கு முதல்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் எஸ்ஏ ராஜ்கண்ணுவுக்கும் குருநாதருக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது.
அடுத்த பட வாய்ப்புக்காக நானும் பாலகுருவும் சேர்ந்துதான் ஏதோ சொல்லிக்கொடுத்து இப்படி செய்துவிட்டதாக குருநாதர் என்னை தப்பாக நினைத்து விட்டார். நான் அப்படி செய்யவில்லை என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. இது எனக்கு மிகவும் மனக்கஷ்டத்தை தந்துவிட்டது. அதனால் இனிமேல் ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ் தயாரிப்பில் படம் பண்ண மாட்டேன். பட சான்ஸ்க்காக குரு துரோகம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக அவரிடம் கூறிவிட்டு வந்து விட்டேன்.
ஒரு கட்டத்தில் பிளாங்க் செக் தந்து என்னை ஒரு படம் இயக்குமாறு ராஜ்கண்ணு என்னிடம் கேட்டார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். பல தடவை அவர் கேட்டும் அவருக்கு நான் படம் பண்ணவில்லை. வேறு ஒரு தயாரிப்பாளர் மூலம் சுவரில்லாத சித்திரங்கள் படம் டைரக்ட் செய்தேன். அப்போது அந்த படத்தின் துவக்கவிழா பூஜை அழைப்பிதழை சிகப்பு ரோஜாக்கள் படப்பிடிப்பில் இருந்த பாரதிராஜாவிடம் காட்டி, என்னை நீங்கள் தப்பாக நினைத்து விட்டீர்கள் என்று சொன்னேன்.
இப்போது நான் எஸ்ஏ ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ் தயாரிப்பில் படம் இயக்கவில்லை. பகவதி கிரியேஷன்ஸ் என்ற வேறு ஒரு தயாரிப்பாளர் படத்தை தான் டைரக்ட் செய்கிறேன் என்றும் அழைப்பிதழில் சுட்டிக் காட்டினேன். அதற்கு அவர், யோவ் என்னய்யா, எப்படியாவது சான்ஸ் கிடைக்குதுன்னு படம் பண்ணாமல் இப்படி சொல்லிட்டு இருக்கே? நான் அன்னிக்கு ஏதோ ஒரு மூடுல அப்படி சொல்லிட்டேன் என்றார்.
இல்லை சார். உங்ககிட்ட தொழிலை கத்துக்கிட்டு உங்களுக்கு துரோகம் பண்ண மாட்டேன். உங்க மனசை நோகடிச்சிட்டு நான் ஜெயிக்க விரும்பவில்லை. பிளாங்க் செக் கொடுத்தும் நான் அதை வாங்கலே. இந்த தயாரிப்பாளர் கோபிநாத் 500 ரூபாய்தான் அட்வான்ஸ் கொடுத்தார். சின்ன கம்பெனிதான் என்றும் சொன்னேன். இந்த விஷயத்தை இப்பவும் நான் பெருமையாக என்னை பற்றி மரியாதையாக நினைத்துக் கொள்வேன். மற்றவர்களை ஏமாற்றி காயப்படுத்தி நாம் ஜெயிக்க கூடாது என்று அந்த நேர்காணலில் கே பாக்யராஜ் தன் மகனிடம் பெருமையாக கூறியிருக்கிறார்.





