கடந்தாண்டு மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ படத்துக்குப் பிறகு ஓராண்டு காலமாக நடிகர் சூர்யா நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை. ஓராண்டு கழித்து நடிகர் சூர்யா நடிப்பில் இன்று கருப்பு படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் காட்சி சிறப்பு காட்சி காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
நடிகர் சூர்யாவுடன் திரிஷா ஆர்ஜே பாலாஜி ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் மலையாள நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்த கருப்பு திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக இன்று காலை சிறப்பு காட்சி அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
அறிவித்தபடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கருப்பு படம் ரிலீஸ் ஆகவில்லை. காலை 11 மணிக்குள் இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து பகல் 12 மணி காட்சி முதல் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைனான்சியர்கள் தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் பகல் காட்சிகளும் ஓடவில்லை. இன்று மாலை வரை படம் ரிலீஸ் ஆகவில்லை.
தங்களுக்கு தரவேண்டிய மொத்த தொகையும் தந்தாக வேண்டும் என்று பைனான்சியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக 90 கோடி ரூபாய் வரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பைனான்சியர்களுக்கு தரவேண்டிய சூழ்நிலையில் அந்த தொகையை தயாரிப்பு நிறுவனத்தால் உடனடியாக ரெடி செய்ய முடியவில்லை. பேச்சு வார்த்தையில் குறிப்பிட்ட தொகையை பாக்கி வைத்து மீதியை தந்து படத்தை வெளியிடலாம் என்ற பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9 மணி பகல் 12 மணி மதியம் 3 மணி ஆகிய பகல் காட்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் கட்டணங்களை திருப்பித் தருகிறோம் என தியேட்டர்களாக உரிமையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு கருப்பு படம் ரிலீஸ் ஆகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் விட்டு அழுதுள்ள அவர், இன்று எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான். எப்படியாவது பிரச்சனைகள் தீர்ந்து இன்று மாலை 6 மணிக்குள் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறேன். படம் ரிலீஸ் ஆகாததற்கு ரசிகர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை கருப்பு படம் ரிலீஸ் குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை.





