ஒரு நல்ல நடிகர் பல படங்களில் நடித்துதான் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடிகர் கவுண்டமணியிடம் சவுக்கியமாண்ணே என்று ஒரு டயலாக் பேசி தான் நடிகர் வடிவேலு பின்னாளில் பெரிய காமெடி நடிகராக உருவானார். 16 வயதினிலே படத்தில் பத்த வெச்சுட்டியே பரட்ட என்ற டயலாக்கை பேசிதான் நடிகர் கவுண்டமணி பின்பு பெரிய காமெடி கிங் ஆனார்.
இப்படி பல நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் நடித்து பிறகு பின்னாளில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாக மாறியிருக்கின்றனர். ஆனால் சில குணச்சித்திர நடிகர்கள் ஓரிரு காட்சிகளில் நடித்துவிட்டு பிறகு சினிமாவிலேயே நடிக்காமல் விலகி விட்டாலும் கூட அந்த ஒரு படத்தில் அவர் நடித்த ஒரு சில காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில், ரசிகர்கள் மனதில் நிரந்தமாக தங்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குனர் சசிக்குமார் இயக்குனராக நடிகராக அறிமுகமான முதல் படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். சசிக்குமாருடன் ஜெய் கஞ்சா கருப்பு ஸ்வாதி உள்ளிட்டோரும் நடித்திருப்பார்கள். இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. இதையடுத்து நாடோடிகள் படமும் சசிக்குமாருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
சுப்ரமணியபுரம் படத்தில் மொக்கச்சாமி என்ற கேரக்டரில் நடித்தவர் மதுரையை சேர்ந்த இலைக்கடை முருகன். முகம் முழுக்க அம்மை தழும்புகளும் முறுக்கு மீசையும் ஆஜானுபாகுவான உடல் தோற்றமும் கொண்ட அவர் சுப்ரமணியபுரம் படத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருப்பார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் மொக்கச்சாமி. ஊரில் பெரிய மனிதரான அவர், சவுண்ட் சர்வீஸ் வைத்து கோவில் விழாக்களுக்கு மின்விளக்குகள் ஸ்பீக்கர் கட்டுபவரின் மனைவியுடன் கள்ளத்தனமாக தொடர்பு வைத்திருப்பார்.
ஊரில் திருவிழா நடக்கும் நாளில், மொக்கச்சாமி தன் காதலி வீட்டுக்கு வருவதும் ஏய் ராசாத்தி தண்ணீ கொண்டா என்று கேட்பதும் அப்போது கஞ்சா கருப்பு உள்ளிட்ட சிலர் வீட்டை முன்பக்கமாக பூட்டிவிட அவர் பின்வாசல் வழியாக சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து சேறும் சகதியுமாக செல்வது போல அந்த காமெடி காட்சி இருந்தது, ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.
மதுரை மூனுமாவடியை சேர்ந்த இவரது பெயர் இலைக்கடை முருகன். 76 வயதான அவர் மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி சந்தையில் இலைக்கடை நடத்தி வந்தார். மொக்கச்சாமியாக சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து கொம்பன் தோரணை வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில வாரங்களாக ஓய்வில் இருந்த அவர் காலமானார். கடந்த வாரத்தில் நடிகர் ராஜேஷ் மறைந்த நிலையில், நடிகர் இலைக்கடை முருகனும் காலமானது கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.





