சினிமாவில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த எம்ஜிஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியிலும் அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலும் தீவிர ஆர்வம் காட்டினார். பேரறிஞர் அண்ணாவின் மீது கொண்ட அளவற்ற அன்பால் திமுக கட்சி பிரசார கூட்டங்களிலும் பங்கேற்றார். தனது படங்களிலும் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் திமுக தலைவராக கருணாநிதி வந்த பிறகு கட்சிக்குள் நடந்த வரவு செலவு முறைகேடுகளை எம்ஜிஆர் தட்டிக் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அதனால் திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை துவங்கினார். கடந்த 1977ம் ஆண்டு முதல் 87ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார்.
தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதில் 3வது முறை எம்ஜிஆர் உடல் நலமின்றி அமெரிக்காவில் உள்ள ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போதும் அவர் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தது. அதனால்தால் எம்ஜிஆரை படுத்துக்கொண்டே ஜெயித்தவர் என்று பலரும் பாராட்டுவார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவில் ப்ருக்ளின் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய டாக்டர்கள் குழுவுக்கு எம்ஜிஆர் மரியாதை செய்ய விரும்பினார். அதனால் அந்த டாக்டர் குழுவை ஒருமுறை சென்னைக்கு வரவழைத்தார். அவர்களை தனது வீட்டில் விருந்து கொடுத்து உபசரித்தார். சென்னையில் உள்ள முக்கிய இடங்களை அவர்கள் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகளை செய்தார்.
அப்போது எம்ஜிஆர் ப்ருக்ளின் டாக்டர்கள் குழுவுக்கு ஒரு திரைப்படத்தை காணவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்தார். அந்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள். இதையறிந்த சிலர் நீங்கள் நடித்த சிறந்த படங்கள் நிறைய இருக்கும்போது தில்லானா மோகனாம்பாள் படத்தை காட்டுகிறீர்களே? என்று எம்ஜிஆரிடம் ஆச்சரியமாக கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த எம்ஜிஆர், நான் நடித்த படங்கள் அவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தராது. அவை அனைத்துமே ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம். தம்பி சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் அவர்கள் ஹாலிவுட்டில் பார்க்காத ஒரு அனுபவத்தை தரும். அதுமட்டுமல்ல, தம்பியை போல நடிக்க ஹாலிவுட்டில் யாரும் இல்லை என்பதையும் காட்ட விரும்புகிறேன், என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.





