தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு வசூல் மன்னன் என்ற பெயர் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதாவது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தராத நடிகர்கள் 4 பேர் உள்ளனர். அவர்கள் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜீத்குமார். இவர்கள் 4 பேர் நடித்த எந்த படமாக இருந்தாலும் லாபத்தில் குறையுமே தவிர, நஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படாது. மொக்கை படம் கூட நஷ்டம் தராமல் தயாரிப்பாளரை காப்பாற்றி விடும்.
பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நேற்று முன்தினம் வெளியானது. தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டுமே சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று 1150 திரைகளுக்கு மேல், 5 காட்சிகள் என திரையிடப்பட்டது. 2 நாட்கள் கேட்டதற்கு அரசு ஒருநாள் மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதித்தது.
ஆனால் கேரளாவில், அதிகாலை 4 மணி, காலை 7 மணி என சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டதால், 700 திரைகளில் 4000க்கும் அதிகமாக தி கோட் படக் காட்சி அன்று ஒருநாள் மட்டும் திரையிடப்பட்டது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும், கேரளாவில் அதிக காட்சிகளும், அதிக வசூலும் கிடைக்கும் என்று பேசப்பட்டது. அதே போல் ஆந்திரா, கர்நாடகாவில் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 6000 திரைகளில் தி கோட் படம் திரையிடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் அக்டோபரில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் மொத்தம் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆனால் அந்த படம் இரட்டை பிறவி, நரபலி என பல எதிர்மறை விமர்சனங்களால் பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக விஜய் வென்றார். அதே போல் இந்த முறை தி கோட் ரூ. 1000 கோடி வசூலில் எட்டப்படும் என்று படத்தை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
இந்த சூழலில் தி கிரேட்டஸ்ட் ஆல்டைம் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில், 38.3 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், 2வது நாளில் 21 கோடி வரை வசூலித்ததாகவும் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் மட்டும் தி கோட் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் உலக அளவில் முதல் நாளில் 95 கோடி ரூபாய் முதல் 100 கோடி வரை தி கோட் படம் வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் முதல் நாளில் தி கோட் உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்ததாக தெரிவித்துள்ளது. 2வது நாளில் உலகளவில் ரூ. 148 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டே நாட்களில் ரூ. 150 கோடியை நெருங்கிய தி கோட், இன்னும் ஒரு வாரத்தில் ரூ. 1000 கோடி இலக்கை கடந்துவிடும் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





