நடிகர் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு படத்தை டைரக்ட் செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தி கோட் படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில், இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் விஎப்எக்ஸ் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட சில நடிகர்களை இளமையாக காட்ட டீஏஜிங் தொழில்நுட்ப பணிகளும் நடக்கின்றன.
இந்நிலையில் தி கோட் படம், இசை வெளியீட்டு விழா மலேசியா அல்லது துபாயில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக துவக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் இப்போது இசை வெளியீட்டு விழா இல்லை என்பது உறுதியாக முடிவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், இதுவரை வெளியான தி கோட் படத்தின் 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
வழக்கமாக விஜய் பாடல்கள் என்றாலே அதில் துள்ளலும், உற்சாகமும், பாடல் வரிகளில் குதூகலங்களும் நிறைந்திருக்கும். ஆனால் விசில் போடு, சின்ன சின்ன கண்ணிலே, நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு ஆகிய 3 பாடல்களுமே பழைய பாடல்களில் புதிய காப்பி போலவே இருக்கிறது. இந்த பாடல்களில் இசையில் எந்த வைப்பும் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. இந்த நிலையால் கூட இசை வெளியீட்டு விழா வேண்டாம் என படக்குழுவும், விஜயும் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. வருகிற 19ம் தேதி தி கோட் ட்ரெயிலர் வெளியாகிறது. இது ஆடி பௌர்ணமி என்பதால், அந்த நாளில் ட்ரெயிலரை வெளியிட இயக்குனர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக ஆட்சியில், அமைச்சரவை மாற்றமும் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி என்ற தகவலும் வந்துள்ளது. இதில் ஒருவேளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவியை குறி வைக்கிறார். தி கோட் பட ட்ரெய்லர் வெளியீடு நாளில், உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படும் பட்சத்தில், விஜயின் நேரடி போட்டியாளர் உதயநிதி என்பதும் அந்த நாளில் உறுதியாகி விடும். இது அரசியல், சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தலாம்.





