தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டுப் பதிவில் நடிகர், நடிகையர் தங்களது ஜனநாயக கடமையாற்ற, ஓட்டுச் சாவடி மையங்களுக்கு வந்து தங்களது ஓட்டைபதிவு செய்தனர். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி, திரிஷா, குஷ்பூ, ராதிகா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
ஆனால், காமெடி நடிகராக இருந்து, சமீபமாக ஹீரோவாக மாறிய நடிகர் சூரியும் தனது ஓட்டைப் பதிவு செய்ய மனைவியுடன் ஓட்டுச் சாவடிக்கு வந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இல்லை என தெரிய வந்தது. அதனால் தனது ஜனநாயக கடமையை செய்ய முடியாத ஏமாற்றத்துடன் அவர் திரும்பி சென்றார்.
எனது மனைவிக்கு ஓட்டுரிமை கிடைத்த நிலையில், எனக்கு ஓட்டு போட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். அடுத்த முறை கண்டிப்பாக நான் ஓட்டுப்பதிவு செய்வேன். இந்த முறை எப்படி தவறு நடந்தது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவருமே உங்களது ஓட்டைப் பதிவு செய்யுங்கள். ஜனநாயக கடமையாற்றுங்கள் என்று வீடியோ வெளியிட்டு நடிகர் சூரி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஓட்டு போட வந்த முன்னணி நடிகர்கள் சிலர் வெள்ளை சட்டை அணிந்த நிலையில் வந்தனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜீத், சியான் விக்ரம் போன்றவர்கள் வெள்ளை சட்டை அணிந்திருந்தனர். இதற்கான காரணம் என்ன, ஏன் அவர்கள் வெள்ளை சட்டை அணிந்து வந்திருந்தார்கள் என்ற ஒரு சூட்சுமம் நிறைந்த கேள்விக்கு இப்போது பதில் தெரிய வந்திருக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. பல கட்சி கொடிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சி கொடிகளும், பல நிறங்களில் காணப்படுகின்றன. இதில் ரஜினி, விஜய், அஜீத் போன்றவர்கள் குறிப்பிட்ட நிறத்தில் கலர் சட்டையில் அணிந்து வந்தால், அந்த நிறத்தில் கட்சிக்கொடி இருக்கும் அரசியல் கட்சியை குறிப்பிட்டு, அவர் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வந்தார் என்று ஒரு கதையை கிளப்பி விடுவர்.
குறிப்பிட்ட இந்த கட்சிக்கு ஆதரவாக தான் அந்த கட்சி கொடி நிறத்தில் உள்ள சட்டையை அந்த நடிகர் அணிந்து வந்தார். தனது ரசிகர்களுக்கு இதன் மூலமாக ஒரு குறியீடை காட்டி விட்டார் என்று தங்கள் மீது அபாண்டமாக பழி போட்டு விடுவார்கள். எதற்கு இந்த வம்பு என்றுதான் அதைப் பற்றி யோசித்த நடிகர்கள் பலரும், வெள்ளை சட்டை அணிந்து வந்து தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக் கொண்டனர் என்கிற ஒரு விஷயம் இப்போது வெளிவந்துள்ளது.





