இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு படம் ஒரு நாள் தாமதமாக இன்று ரிலீஸானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா திரிஷா நடித்துள்ள இந்த படம் நேற்று 14ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நேற்று இந்த படம் வெளியாகவில்லை.
இதனால் சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். நேற்று காலை 9 மணி சிறப்பு காட்சி மட்டும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பிறகு பகல் காட்சிகள் மற்றும் இரவு காட்சிகளும் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் கடைசியாக தீர்வு ஏற்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு கருப்பு படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, காலத்தை மட்டுமல்ல இதயத்தையே சோதிக்கும் சில பயணங்கள் உண்டு. கருப்பு படத்திற்காக காத்திருந்த, படம் குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த, மௌனமும் தாமதங்களும் சூழ்ந்து இருந்த காலத்திலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் ஒரு மன்னிப்பையும் அதைவிட முக்கியமாக எங்கள் ஆழ்ந்த நன்றி.
இந்த காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்த படத்தை மிகுந்த அன்போடும் எதிர்பார்ப்போடும் நெஞ்சில் சுமந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாகவே அழுத்தியது.ஆனால் ஒவ்வொரு பின்னடைவின் போதும் உங்கள் ஆதரவும் உங்கள் செய்திகளும் உங்கள் நம்பிக்கையும் உங்கள் எல்லையற்ற அன்பும் இந்த கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.
இன்று நிறைந்த இதயத்தோடும் நன்றி கண்ணீரோடும் நாங்கள் இறுதியாக அறிவிக்கிறோம். கருப்பு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் எங்கள் ரத்தமும் வியர்வையும் உறக்கமற்ற இரவுகளும் போராட்டங்களும் உணர்வுகளும் கலந்து இருக்கின்றன. இது இனி வெறும் எங்கள் கதை மட்டுமல்ல. இந்த பயணத்தில் எங்கள் துணையாக நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது. காத்திருந்தமைக்கு நன்றி. நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது எக்ஸ் பதிவில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. கருப்பு படம் இன்று வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கருப்பு படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத படத்தின் நாயகி திரிஷா இன்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். சென்னையில் நடந்த இந்தப் படத்தின் காட்சியில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நடிகர் கார்த்தி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.





